வணக்கம் நண்பர்களே!
நண்பர் ஒருவர் பதிலை அனுப்பி இருந்தார். அவரின் பதிலை அப்படியே கொடுத்துள்ளேன். படித்துவிட்டு நீங்களும் எழுதி அனுப்புங்கள்.
ஐயா அவர்களுக்கு திருவாரூர் சரவணனின் அன்பு வணக்கம்.
ஏப்ரல் 28 அன்று உங்கள் பதிவு பற்றி நாங்கள் நினைப்பதை எழுதி அனுப்ப சொல்லியிருந்தீர்கள். நான் எப்பவுமே கொஞ்சம் ஸ்லோதான். ஒரு காரியத்தை செய்ய இறங்குறதுக்கு முன்னால ஆயிரம் என்ன 5ஆயிரம் தடவை கூட யோசிச்சு செய்யாம கூட விட்டிருக்கேன். ஆனா செய்யுறதுன்னு முடிவு பண்ணிட்டா அவ்வளவு எளிதில் பின் வாங்கும் வழக்கம் கிடையாது. மிக மிக தவிர்க்க முடியாத சூழல்ல பெவிலியன் திரும்புற மாதிரி இருந்தாலும் அந்த முடிவும் ஸ்ட்ராங்கா இருக்கும்.
இப்போ உங்கள் கேள்விக்கு பதில் எழுத உட்கார்ந்ததும் இப்படித்தான். நாலு நாளா இப்போ, அப்போன்னு குழம்பி, எழுதுவோமா வேண்டாமான்னு தடுமாறி மனசுல தோணுனதை உங்களுக்கு அனுப்பிடுவோம்னு இறங்கிட்டேன்.
உங்கள் பதிவைப்பொறுத்தவரை இரண்டு விஷயங்களை சரியான கோணத்தில் அணுகி அதன்படி வழிகாட்டுகிறீர்கள் என்று தோன்றுகிறது.
1) பிரச்சனைகள் என்றால் குருவை நாடி சென்றாலும் சில பிராத்தனைகள், வழிமுறைகள், வழிபாடுகளை பிரச்சனைக்குரியவர்கள்தான் செய்ய வேண்டும். அதை சிம்பிளாக ஒவ்வொருவரும் வீட்டிலேயே செய்யலாம் என்று கூறுகிறீர்கள். பணத்தைப் பற்றி மட்டும் யோசிக்கும் நபர்கள் இப்படி சொல்ல மாட்டார்கள். அதாவது வழிகாட்ட மாட்டார்கள். நீங்கள் அதை செய்கிறீர்கள். இது தங்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்துகிறது. ஒருவன் தன் பசிக்கு அவன் தான் சாப்பிட வேண்டும். அவன் பாஸ் பண்ண அவன் தான் தேர்வு எழுத வேண்டும். அவனுக்கு வந்த நோய்க்கு அவனுக்குதான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
ஆனால் மக்களுக்கு ரேசன் கடை க்யூ முதல் தேர்வு எழுதுவது வரை அடுத்தவர் செய்து பலனை மட்டும் இவருக்கு அல்வா மாதிரி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்படி செய்தால் கர்மாதான் கூடுமே ஒழிய நிச்சயமாக குறையாது என்பதை பலரும் உணர்வதே இல்லை. இப்படி குறுக்குசால் ஓட்டுவது புண்ணுக்கு புனுகு தடவியதை போலத்தானே தவிர் நிரந்தரமாக சங்கடத்தை மட்டுமே தரும் என்பதை பலரும் சொல்வதில்லை.
2) ஆனால் நீங்கள் ஒருவருக்காக அம்மனிடம் ஒரு பூஜை செய்வது என்று முடிவெடுத்துவிட்டால் கட்டணம் வசூலித்து விடுவது என்பது உங்களுக்கு ஆகும் செலவை ஈடுகட்ட மட்டுமின்றி அவர்களுடைய கர்மாவை குறைக்கவே பணம் வாங்குகிறேன் என்று உண்மையை சொல்லிவிடுகிறீர்கள். ஆன்மிகத்தை புரிந்து கொள்ள முயற்சிக்காதவர்கள்தான் இதை தவறு என்று கூறுவார்கள். ஆனால் நான் புரிந்து கொள்ள ஆசைப்பட்டு முயற்சிப்பதால் நீங்கள் கூறும் காரணமும் புரிந்து விட்டது.
*****************************
இனி நான் கூறப்போகும் தகவல்களை வெளியிடுவது என்று முடிவு செய்தீர்களேயானால் என் பெயரைப் பயன்படுத்தாமல் யாரோ ஒருவருடைய அனுபவம் என்று மட்டும் சொல்லுங்கள் போதும்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு இடத்திற்கு புதிதாக அலுவலகத்தை மாற்றிக்கொண்டு சென்றபோது அதற்கு பக்கத்து ரூமில் சீட்டாட்டம், மது, புகை தாராளமாக புழங்கியது. சீட்டு, மது இரண்டும் அந்த நேரத்தில் அவர்களை மட்டும் தான் பாதிக்கும். (பின் விளைவுகள் பலரையும் பாதிக்கலாம் அது வேறு கதை) ஆனால் புகை மட்டும் அவர்களை சுற்றி இருப்பவர்களை உடனடியாக பாதிக்கும் என்பது உங்களுக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த ஆட்கள் அரசியல் வியாதிகள், தொழில் அதிபர்கள். என்னால் அவர்களை எதிர்த்து என்ன செய்ய முடியும். இப்போதான் இங்கே வந்தேன். வேறு இடம் உடனடியாக பார்ப்பது சரியா வருமா என்று என் நண்பர் ஒருவரிடம் புலம்பினேன். அவர், உங்கள் கோரிக்கை நியாயமானதுதான். அதை அப்படியே இறைவனிடம் சொல்லுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும் என்றார்.
முதலில் நம்பிக்கைப்படவில்லை என்றாலும், ஆசாமி உதவாத நேரத்தில் சாமிதான் கதி என்று நினைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்லும்போது இதைப் பற்றியும் மனதில் நினைத்தேன். அதாவது, அவர்கள் எனக்கு தொந்தரவு செய்யாமல் இருக்க என்ன செய்யணுமோ அதை நீ பார்த்துக்க என்று மட்டும்தான் மனதில் நினைப்பேன். பத்து நாட்கள் கூட இல்லை. அவர்கள் அந்த அறையை காலி செய்து விட்டு அதற்கு மேலே உள்ள மாடிக்கு சென்றுவிட்டார்கள். என் காதுக்கு வந்த காரணம், என் அலுவலகத்துக்கு பத்திரிகை நிருபர்கள் எல்லாரும் அவ்வப்போது செய்தி அனுப்ப வருவார்கள். அவர்களைப் பார்த்த சீட்டாட்ட ஆசாமிகள், நிருபர் எல்லாம் ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்க மாட்டாங்க. போலீஸ், கலெக்டர்னு பெரிய பழக்க வழக்கம் இருக்கும். அதனால நாம ஒதுங்கிடுவோம் என்று காலி செய்து அறை மாற்றிக்கொண்டார்களாம்.
அப்போது அதை நான் பெரிய விஷயமாக நினைக்க வில்லை. ஆனால் ஜாதக கதம்பம் பதிவுகளை படிக்கும்போது பிரார்த்தனையின் வலிமை எவ்வளவு பெரியது என்பதை உணர்ந்து கொண்டேன்.
நன்றி,
திருவாரூர் சரவணன்.
தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Dear sir
He told to not mention the name but the name and place is showing
Antony
Post a Comment