Followers

Saturday, May 25, 2013

ஆன்மீக பயண அனுபவம் 1



வணக்கம் நண்பர்களே!
                    நேற்று நமது பிளாக் சார்பாக கிரிவலம் சென்று வந்தோம் அதனைப் பற்றி உங்களுக்கு சொல்லி விடவேண்டும் என்பதால் இந்த பதிவு.

நேற்று காலையிலேயே நான் கிளம்பிவிட்டேன். நான் நேராக திருவக்கரை சென்று வக்கரகாளியை தரிசனம் செய்ய சென்று இருந்தேன். நான் மாதம் ஒருமுறையாவது அங்கு செல்வது வழக்கம். நேற்று காலை தாம்பரத்தில் பஸ்சை பிடித்து கூட்டேரிபட்டு சென்று அங்கு இருந்து திருவக்கரை சென்றேன். 

தாம்பரத்தில் பஸ்ஸில் ஏறி அமர்ந்த பிறகு பஸ்சை சிறிது நேரத்தில் எடுத்துவிட்டார்கள். அடடா சும்மா சொல்லகூடாது வெயிலின் தாக்கம் கொன்று எடுத்தது. அனல்காற்று என்றால் அப்படி ஒரு அனல்காற்று வீசுகிறது. கூட்டேரிபட்டில் இறங்கினேன். கூட்டேரிபட்டில் ஒரு மெஸ் ஒன்று உள்ளது. வீட்டுசாப்பாடு போல் இருக்கும் அங்கு மதியஉணவை முடித்தேன். பஸ்சை பிடித்து திருவக்கரை சென்றேன். 

திருவக்கரை அடைந்த பிறகு அம்மனை தரிசனம் செய்துவிடலாம் என்று சென்றால் அங்கு அம்மனை பார்க்க டோக்கன் போடுகிறார்கள். நான் சாதாரண நாட்களில் மட்டும் அங்கு சென்றது உண்டு நேற்று பெளர்ணமி என்பதால் அங்கு விழா எடுக்கிறார்கள். டோக்கன் எவ்வளவு என்று கேட்டால் 10, 20, 50 ரூபாய். நான் போன நேரத்தில் அங்கு கூட்டமே இல்லை. மொத்தம் நூறு பேர் கூட இருக்கமாட்டார்கள். சரி என்று இருபது ரூபாய் டோக்கனை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால் செல்லும் வழி எங்கும் சூடு என்றால் அப்படி ஒரு சூடு சிமெண்ட் தரைக்கு சூரியபகவானே இறங்கி உட்கார்ந்துவிட்டார் போல. கால் வெந்துவிட்டது. அட காசு தான் வாங்கிகிறார்கள் ஒரு விரிப்பாவது கீழே போட்டு இருக்கலாம். 

இந்த இடத்தில் ஒன்றை சொல்லவேண்டும் உலகத்திலேயே கடவுளை தரிசனம் செய்ய காசு வாங்கிற ஒரே மதம் நமது இந்து மதம் தான். அடிச்சுக முடியாது. நல்ல குளிர்சாதனம் பொருத்தப்பட்ட மால்களில் உள்ளே செல்வதற்க்கு கூட சென்னையில் பணம் வாங்கமாட்டார்கள். ஏ சி காற்று வாங்கிக்கொண்டு ஒரு நாள் முழுவதும் சும்மா சுற்றிக்கொண்டு இருக்கலாம். ஆனால் கோவில்களில் வாங்கும் நுழைவுச்சீட்டு பணம் சரியான பகல் கொள்ளை என்று சொல்லவேண்டும்.

திருவக்கரைப்பற்றி உங்களுக்கு சொல்லவேண்டும் என்பது நீண்ட நாட்களாக ஒரு ஆசை இன்று தான் அதற்கு வாய்ப்பு அமைந்தது. திருவக்கரையில் காளி வக்கிரகாளியாக இருக்கிறாள். இங்கு உள்ள அனைத்து சந்நதி தெய்வங்களும் வக்கிரமாகவே இருக்கும். 

ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கும் கிரகங்களுக்கு தோஷ நிவர்த்தி செய்ய நல்ல ஸ்தலம். இந்த ஸ்தலத்தைப்பற்றி பல தகவல் சொல்லப்பட்டாலும் எனக்கு தெரிந்த ஒரு தகவலை உங்களிடம் சொல்லுகிறேன்.

தஞ்சாவூரை ஆண்ட ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. ராஜராஜசோழன் காலத்தில் அவனது எல்லை இந்த கோவில் உள்ள இடம் வரை உள்ளது. கோவிலின் அருகில் ஒரு ஆறு ஒன்று செல்லுகிறது. இந்த கோவில் உள்ள இடத்தில் இருந்து பல்லவ மன்னர்களின் ராஜ்ஜியம் தொடங்குகிறது. சோழர் பகுதியில் உள்ள விளைநிலங்களில் உள்ள பயிர்களை பல்லவர்கள் சூறையாடிக்கொண்டு சென்றுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். சோழர்களின் தலைநகரம் தஞ்சாவூரில் இருப்பதால் இந்த எல்லை காவல் காக்கவும் இவர்கள் விளைநிலங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும் ஒரு கோவில் எழுப்பப்பட்டது. 

ராஜ ராஜ சோழன் காலத்தில் ஒரு சித்தரின் ஆலோசனையில் காளியை வக்கிரமாக மாற்றி சாதாரணமாக அமர்த்தாமல் காளியை கொஞ்சம் சாய்வாக அமர்த்தி விட்டார்கள். அமர்த்திய உடன் பல்லவ நாட்டில் உள்ளவர்கள் சோழர்கள் பகுதியில் ஒரு அடியை கூட வைக்கமுடியவில்லை. வக்கிரகாளியிடம் இருந்து தப்பிக்கமுடியவில்லை. காளியின் உக்கிரத்தால் பல்லவர்களுக்கு கெட்டகாலம் என்று கூட சொல்லவேண்டும்.

காளி கற்சிலையாக இருக்கிறாள். இவளை வணங்குபவர்களுக்கு கேட்ட வரத்தை தருகிறாள். ஆன்மீகவாதிகளுக்கு இந்த இடம் ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்லவேண்டும்.ஆன்மீகத்தில் உச்சநிலையில் இருப்பவர்கள் செல்லும் இடம் இது. பல ரகசியங்கள் இங்கே இருக்கிறது. அதனைப்பற்றி சொல்லவேண்டியதில்லை நீங்களே ஆன்மீகத்தில் உச்சநிலைக்கு வந்த பிறகு கண்டுக்கொள்ளலாம். தென்னிந்தியாவில் சக்தி அதிகமாக இருக்கும் இடம் என்றால் ஒன்று மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றொன்று திருவக்கரை வக்கிரகாளி அம்மன்.

இங்கு சிவன் சந்திர மௌலீஸ்வராக அருள்பாலிக்கிறார். இங்கு மட்டும் தான் முகவடிவில் லிங்கம் இருக்கும். மூன்று முகமாக காட்சியளிக்கிறார். முகவடிவ லிங்கம் நேபாளத்தில் மட்டும் தான் இருக்கிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

அம்மனை தரிசனம் செய்துவிட்டு பிற தெய்வங்களையும் வணங்குனேன்.   அங்கு இருந்து புறப்பட்டு திண்டிவனம் சென்றேன். திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றேன். திருவண்ணாமலையில் நான் இறங்கும் பொழுது மாலை 6 மணி ஆனது. நல்ல காற்று வீசியது. நாள் முழுவதும் வெயில் காய்ந்தற்க்கு மழைக்காற்று போல் வீசியது மனத்திற்க்கும் உடலுக்கும் அக்னி ஸ்தலத்தில் குளிராக இருந்தது.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



No comments: