Followers

Thursday, July 4, 2013

தசா நாதன் பகுதி 4


வணக்கம் நண்பர்களே!
                    இவருடைய ஜாதகத்தை பாருங்கள். இவருக்கு கேது தசா ஆரம்பித்த வருடம் 16/08/1999 வது வருடம் கேது தசா எப்பொழுது ஆரம்பித்ததோ அன்று முதல் இவரின் குடும்பத்தில் வறுமை தலைதூக்கியது. கேது இவருக்கு லக்கினத்தில் இருந்து தசாவை நடத்தியது. 

கேது அமர்ந்த இடம் மகரம். சனியின் வீட்டில் அமர்ந்துள்ளது. சனி என்ன செய்யுமோ அதனை கேது செய்தார். சனியின் நிலையை பாருங்கள். சனி எட்டாவது வீட்டில் அமர்ந்துள்ளது. இவர் லக்கினாதிபதியாக இருந்தாலும் எட்டில் அமர்ந்ததால் பிரச்சினை மட்டுமே தந்தது. 



கேது தசாவில் கேது புத்தி

16/08/1999 to 12/01/2000

குறைந்த காலமாக இருந்தாலும் தன்னுடைய புத்தியில் நிறைந்த கஷ்டத்தை கொடுத்தார். இவருக்கு வயது குறைவாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்திற்க்கு தாராளமாக கஷ்டத்தை கொடுத்தார். சுயபுத்தியில் கெடுதலை தரும் என்றும் எண்ணக்கூடாது. பிறகு வரும் புத்திகளும் ஒன்றும் செய்யவில்லை. அவமானத்தை ஏற்படுத்தினார் எட்டாம் வீட்டில் சனி பகவான் அமர்ந்ததால் இந்த பிரச்சினையை கேது பகவான் கொடுத்தார்.

சிறிய காலத்தில் இப்படி எல்லாம் நடைபெறுமா என்று கேட்ககூடாது. கெட்டவனுக்கு ஒரு நிமிடம் போதும் ஆளை அப்படியே தூக்கிக்கொண்டு சென்றுவிடுவான்.

கேது தசாவில் சுக்கிரன் புத்தி

12/01/2000 to 13/03/2001

சுக்கிரன் சொந்த வீட்டில் இருக்கிறார். ஐந்தாவது வீட்டிற்க்கும் பத்தாவது வீட்டிற்க்கும் காரகம் வகிக்கிறார். ஓய்வு நேரத்தில் வேலைக்கு போகிறேன் என்று போய் அங்கு ஒரு பெண்னோடு காதல் வயப்பட்டுவிட்டார். கேது தசாவில் சுக்கிரபுத்தியில் காதல் கொடுக்குமா என்று கேட்ககூடாது. சிறிய வயதில் கோடியில் ஒருவருக்கு தான் ஞானத்தை கொடுப்பார். மீதி அனைவருக்கும் பைத்தியம் பிடிக்க வைத்துவிடுவார். காதல் செய்து பிரச்சினையில் மாட்டினார். ஏன் மாட்டினார் என்றால் லக்கினாதிபதியாக இருக்கும் சனி எட்டில் அமரும்பொழுது அவமானத்தை தருவார்.

காதல் பிரச்சினையில் மாட்டினால் அவமானமா என்று கேட்காதீர்கள் 2000 ஆம் ஆண்டில் ஆண்கள் காதல் செய்தால் கூட அது சமுதாயத்தில் தவறாக தான் பார்க்கும் எண்ணம் மக்களிடம் இருந்தது. இன்னார் பையன் வேறு ஒரு பெண்ணை காதல் செய்யறான் என்று டீ கடையில் உட்கார்ந்து பேசும் காலம் இருந்தது அதனால் சொன்னேன். 

கேது தசாவில் சூரியன் புத்தி

13/03/2001 to 19/07/2001

சூரியன் எட்டாவது வீட்டு அதிபதி அவர் ஏழில் ராகுவோடு அமர்ந்திருக்கிறார். இவர் செய்த காதலால் இவருக்கும் இவரது தந்தைக்கும் பிரச்சினை உருவானது. இருவருக்கும் பேச்சு வார்த்தை கூட இல்லாமல் போய்விட்டது. ஏன் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது என்று கேட்கிறீர்களாக சனி பகவான் அவர்கள் இரண்டாவது வீட்டிற்க்கும் அதிபதி என்ற அஸ்தஸ்தை பெறுகிறார் அல்லவா. பேச்சை குறிக்கும் வீடு அல்லவா இரண்டாம் வீடு அவர் எட்டாவது வீட்டில் அமர்ந்தால் என்ன செய்வார். பேச்சு என்பது பிரச்சினை கொடுக்கும். இவர் ஏகாப்பட்ட பொய்வார்த்தையை பேசியதால் இவருக்கும் இவரது தந்தைக்கும் பேச்சுவார்த்தை கெட்டது. இவரது காதலியோடும் பேச்சை முறித்தார்.

கேது தசாவில் சந்திர புத்தி

19/07/2001 to 17/02/2002

சந்திரன் ஏழாவது வீட்டுக்கு அதிபதி என்பதாலும் அவர் லாபஸ்தானத்தில் அமர்ந்ததால் காதல் பிரச்சினை ஒரளவு முடிந்தது அதனை முடித்துக்கொடுத்தது சந்திரன். பரவாயில்லை இவருக்கு சந்திரன் ஒரளவு உதவிச் செய்திருக்கிறது. அந்த பிரச்சினையை தீர்த்ததும் இவரது அம்மா தான் ஆனால் இந்த புத்தியில் அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது என்பது மட்டும் உண்மை.

கேது தசாவில் செவ்வாய் புத்தி

17-02-2002 to 16-07-2002

செவ்வாய் நான்காவது வீட்டிற்க்கும் மற்றும் லாபஸ்தானத்திற்க்கும் அதிபதி அவர் பாக்கியஸ்தானம் என்னும் சொல்லக்கூடிய ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். இவருக்கும் இவரது தந்தைக்கும் ஒரு பிரச்சினை ஏற்பட்டு வீட்டை கொழுத்திவிட்டார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் இவரின் வீட்டை காப்பாற்றிவிட்டார்கள். 

எப்படி இது நடைபெற்றது என்று நீங்கள் கேட்கலாம். கேதுவை சனிபோல் நினையுங்கள். சனிக்கும் செவ்வாய்க்கும் எப்படி ஒத்துவரும். அதனால் இப்படிப்பட்ட பிரச்சினை வந்தது. சில நேரங்களில் கிரகங்கள் இப்படி தான் வேலை செய்யும்.

கேது தசாவில் ராகு புத்தி

16/07/2002 to 13/08/2003

ராகு ஏழாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஏழாவது வீட்டில் அமர்ந்ததால் இவருக்கு ஒரு திருமணத்தை செய்துவைக்கலாம் என்று அவர்களின் பெற்றோர் முடிவு எடு்ததார்கள் ஆனால் அவர்களின் முடிவை இவர் ஏற்கவில்லை. ஒரு சிலர் பெண்ணை தருகிறேன் என்று சொல்லியும் இவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு சிலருக்கு இப்படியும் அமையும். தானாகவே வந்து அமையும் ஆனால் அதனை வேண்டாம் என்று தடுத்துவிடுவார்கள். 

கேது தசாவில் குரு புத்தி 

13/08/2003 to 09/07/2004

குரு இவரின் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டிற்க்கும் பனிரெண்டாவது வீட்டிற்க்கும் காரகம் வகிக்கிறார். இவர் அமர்ந்துள்ளது ஏழாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். இவர்க்கு பெண் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் அல்லவா இந்த குரு புத்தியில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் அவ்வளவு எளிதில் ஒற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் திருமணம் நடைபெற்றுவிட்டது. இந்த தசாவில் ஒரு நல்லது நடைபெற்று இருக்கிறது என்றால் திருமணமாகதான் இருக்கும். 

கேது தசாவில் சனி புத்தி

09/07/2004 to 18/08/2005

இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏகாப்பட்ட தகராறு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பிரிந்து இருந்தார்கள். வீட்டில் நிம்மதி என்றால் என்ன விலை என்று கேட்க தோன்றது இவருக்கு. இவர் சும்மாகவே இருந்திருக்கலாம் நீங்கள் எனக்கு திருமணத்தை செய்து வைத்து என்னை கொல்லாமல் கொல்லுகிறீர்கள் என்று பேசி புலம்பிவிட்டார். இவருக்கு மனைவியாக வந்தவர் மேல் எந்த தவறும் கிடையாது இவராகவே எதையாவது பேசி அவரை வம்பு இழுத்து பிரச்சினையை கிளப்புவது இவரது வேலை.

கேது தசாவில் புதன் புத்தி

18/08/2005 to 15/08/2006

புதன் ஆறாவது வீட்டிற்க்கும் ஒன்பதாவது வீட்டிற்க்கும் அதிபதியாகிறார். சொந்தவீட்டில் அமர்ந்திருக்கிறார். உறவினர்களோடு எந்தவித ஒட்டும் உறவும் இல்லாமல் இருந்தார். கடனையும் பெற்றார். ஒரு விதத்தில் இவரின் தந்தை இவருக்கு உதவி செய்து இவரை உயர்த்திவிட்டார்.

நண்பர்களே !
           கேது தசா முடிந்து சுக்கிரனின் தசாவில் அதுவும் சுயபுத்தியிலேயே மிகப்பெரிய அளவு உயர்ந்துவிட்டார். அதன் பிறகு வந்த அத்தனை புத்திகளிலும் நல்லமுறையிலேயே இருந்தார். கேது தசா மட்டும் இவருக்கு கஷ்டத்தை தந்தது. கேது தசா நடைபெறும்பொழுது ஒரு வித பைத்திய நிலையை உருவாக்கி விடும். சுற்றி என்ன நடைபெறுகிறது என்பதை உணராமல் செய்துவிடுவதில் கேது வல்லவர். இளமையில் வரும் கேது தசா மிகப்பெரிய வில்லகத்தை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு செய்யும் என்பதில் எவ்விதம் ஐயமும் இல்லாமல் நாம் பலனை சொல்லிவிடலாம்.

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என்று விளம்பரம் வருகிறது அல்லவா அதைப்போல் குறைந்த காலத்தில் கேது அதிக கஷ்டத்தை கொடுத்துவிடுவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Anonymous said...

சனியை விட ராகு கேதுவிற்கு மிகவும்
பயப்பட வேண்டியுள்ளது . லக்னாதிபதி
கெட்டாலே வாழ்வில் பாதி கவலை தான் .எப்படியோ யோககாரகனின் தசையில்
ஜாதகர் நன்றாக இருந்தால் சரி.

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி