Followers

Friday, August 19, 2016

கங்கை கொண்ட சோழபுரம்


வணக்கம்!
         புதன் கிழமை நெய்வேலி சென்று இருந்தப்பொழுது செல்லும் வழியில் கங்கை கண்ட சோழபுரம் இருப்பது தெரியவந்தது. நெய்வேலியில் தனக்காக காத்துகொண்டிருப்பவரை முதலில் பார்த்துவிட்டு வரும்பொழுது இதனை பார்த்துவிடலாம் என்று நேராக நெய்வேலி சென்றேன். நெய்வேலி முடித்துவிட்டு கங்கை கொண்ட சோழபுரம் வரும்பொழுது ஒருமணியாகிவிட்டது கோவில் நடை சாத்தப்பட்டுவிட்டது. கோவிலை வெளியில் இருந்து தான் பார்க்க நேரிட்டது. முடிந்தவரை வெளியில் இருந்து என்ன பார்க்கமுடியுமோ அதனை எல்லாம் பார்த்துவிட்டு வந்தேன்.

என்னை பொறுத்தவரை பழங்கால கோவில்களை எல்லாம் பார்த்து அதனை ரசிப்பவன் என்று சொல்லலாம் அந்தளவுக்கு எனக்கு அதில் ஈடுபாடு உண்டு. பள்ளிகாலத்தில் கூட மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கோவிலுக்கு செல்லும்பொழுது எல்லாம் அந்த கோவிலை பார்த்து ரசிப்பது உண்டு. கட்டடகலை மற்றும் அதில் உள்ள சிற்பவேலைபாடு இதனை எல்லாம் பார்த்து ரசித்து இருக்கிறேன்.

ஜெயங்கொண்டத்தில் அருகில் கங்கைக்கொண்ட சோழபுரம் இருக்கின்றது. ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் வரும்பொழுது இந்த கோபுரம் தெரிய ஆரம்பிக்கிறது. ஜெயங்கொண்டத்தில் இருந்து செல்லும்பொழுது பெரிய அளவில் ஏரி போல் ஒன்று காட்சி அளிக்கிறது. இதனை தான் சோழகால படைகளில் உள்ள குதிரைகளுக்கும் யானைக்களுக்கு தண்ணீர் சேர்த்து வைத்திருந்தார்கள் என்று சொல்லுகின்றனர். ஜெயங்கொண்டத்திற்க்கு நான் பலமுறை பஸ்ஸில் பயணம் செய்து இருக்கிறேன். இந்தமுறை காரில் செல்லும்பொழுது அனைத்தையும் நிறுத்தி பார்த்துவிட்டு சென்றேன்.

நம் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்க்கு சென்று படை எடுத்து அந்த நாட்டை பிடித்த மன்னன் இராசேந்திரசோழன் என்று படித்த காரணத்தால் அந்த மன்னிடம் ஏதோ ஒரு விஷேச குணம் ஒன்று இருக்கின்றது என்ற காரணத்தால் இந்த கோவிலை நிறுத்தி பார்க்கவேண்டும் என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது.

இந்த காலத்தில் இவ்வளவு நவீன வசதி இருக்கும்பொழுது அந்த காலத்தில் எந்த வசதியும் இல்லாமல் கடல் கடந்து நாட்டை பிடிக்கின்றார்கள் என்றால் அதனைப்பற்றி நாம் பேசியே ஆகவேண்டும் அல்லவா. அதனால் தான் சொன்னேன்.

இராஜராஜ சோழன் இருக்கும்பொழுதே இராசேந்திர சோழனுக்கு முடிசூட்டப்பட்டு ஆட்சி நடத்தினார்கள் என்று படித்து இருக்கிறேன். பல வருடங்கள் கங்கை கொண்ட சோழபுரம் சோழகர்களின் தலைநகராக விளங்கியது. (வரலாற்றை தேடித்தான் படிக்கவேண்டும்).

இந்த கோவில் முழுமையாக முடிக்கபெறாத கோவில் என்று தான் அனைவரும் சொல்லுகின்றனர். உண்மையில் தஞ்சாவூர் பகுதியில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்கள் அனைத்தும் கற்களால் கட்டப்பெற்ற கோவில். இங்கு மலைகள் இல்லை ஆனால் கல்லால் அனைத்தையும் கட்டியுள்ளனர். அனைத்து கோவில்களும் முழுமையாக முடிக்கப்பட்டு தான் கோவில்இருக்கின்றது. இந்த கோவிலையும் முழுமையாக தான் கட்டி இருப்பார்கள்.

இராசேந்திர சோழனுக்கு பிறகு 250 வருடங்கள் இங்கு சோழர் ஆட்சி நடந்துள்ளது. கண்டிப்பாக சோழர்கள் கோவிலை கட்டாமல் விட்டு வைத்திருக்கமாட்டார்கள். இந்தியா முழுவதும் படை எடுத்த ஒரு மன்னன் இந்தியாவை விட பெரும் பகுதியை ஆண்ட ஒரு மன்னன் கோவிலை கட்டினால் பாதியில் விடுவான என்ற ஒரு சந்தேகம் எனக்குள்ளும் இருக்கின்றது. காலத்தில் ஏற்பட்ட பல மாற்றம் இந்த கோவிலுக்கும் ஏற்பட்டு இருக்கலாம்.

இந்த கோவிலும் சிவன் கோவில் தான். உள்ளே சென்று பார்க்க ஏதோ ஒரு தடை நமக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அதாவது நமது கர்மா முழுமையான ஒரு பார்வையை பார்க்க விடவில்லை. அடுத்து ஒரு வாய்ப்பை எனக்கு தரும் என்று நினைக்கிறேன் பார்க்கலாம்.

உங்களுக்கு ஒரு தகவலை நான் சொல்லவேண்டும் அல்லவா. இந்தியா முழுமையாக வென்ற மன்னன் இந்தியாவை விட்டு பல நாடுகளுக்கு சென்று அங்கும் தன் ஆட்சியை நிலைநிறுத்திய மன்னன் கட்டிய கோவிலை பார்க்கும்பொழுது நாம் நாட்டை பிடிக்கவேண்டாம் நமது வீட்டை திறம்பட நடத்த ஒரு ஆவல் ஏற்படும் அல்லவா. அந்த காரணத்தால் தான் இப்படிப்பட்ட விசயங்களை நீங்கள் தேடி செல்லலாம்.

ஒரு மன்னன் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று ஆட்சி பிடித்த மன்னனின் மனதிடத்தை நாம் வரவழைத்தால் நமது வாழ்க்கையில் வரும் இடையூறுகளை எல்லாம் நாம் சமாளித்து நமது வாழ்க்கை ஒரு வெற்றி வாழ்க்கையாக மாற்றமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: