Followers

Monday, June 24, 2013

குரு


வணக்கம் நண்பர்களே!
                    மாதா,பிதா, குரு, தெய்வம் என்பது பழமொழி குழந்தைக்கு மாதா பிதாவை அடையாளம் காட்டுவார். மாதாவும் பிதாவும் குருவை அடையாளம் காடடுவார்கள். குரு தெய்வத்தைக் காட்டுவார். குரு அவசியம் தேவை.

புலன் மயக்கத்திருந்து மனிதனை விடுவிக்க குரு ஒருவரால் தான் முடியும். குரு இல்லாத வித்தை பாழ் என்பார்கள். ஞானமார்க்கத்திற்க்கு குரு தேவை. அறியாமை என்ற இருளை அகற்றுபவர் குரு. ஒருவன் வேதங்கள் கற்றிருந்தாலும் ஆகமங்கள் உபநிடதங்கள் பயின்று இருந்தாலும் குருவின்றி மெய்ஞானம் அடைய முடியாது.

வாழ்க்கையின் வழிகளையும் ஆன்மீகப் பணிகளையும் குரு காட்டுவார். குருவே தெய்வம் குருவினிடத்தே நிழல் போன்று நின்று அவரது செயல்களுக்கெல்லாம் ஒத்துப் பழகி இருத்தல் வேண்டும். குருவிற்க்கு மேலானது ஏதுமில்லை. எவரைப் பார்த்த மாத்திரத்திலேயே மனதில் தானாகவே சாந்தியும் திடமும் மகிழ்ச்சியும் உண்டாகிறதோ அவரே பரம குரு என்கிறது குரு கீதை.

குரங்குக் குட்டியானது குரங்கைப் பிடித்துக் கொள்வதுபோல் குருவை பக்தன் பற்றி நிற்க வேண்டும் குரு பார்வை கிடைத்ததும் பூனைக் குட்டியைப் பூனை தூக்கிச் செல்வது போல சீடனை குரு தூக்கி செல்வார்.

எல்லோராலும் குருவாகி விட முடியாது மிதந்து கொண்டிருக்கும் மரக்கட்டை பல மனிதர்களையும் விலங்குகளையும் ஆற்றைக் கடந்து அழைத்துச் செல்லக்கூடும். நல்ல குரு பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் வலுவான கட்டை போன்றவர் என்பார் ஸ்ரீ ராம கிருஷ்ணர்.

இந்த அரும்பிறவியில் முன் வினை அறுத்து எல்லையில்லா மெய்பொருளை அடைவதற்க்கு வந்த ஒரு எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்க்கு வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை.  அவரின் திருவடியை வணங்கி மகிழ்வதாக வேதாத்திரி மகரிஷி இன்பமுறுகிறார்.

பக்தன் தகுந்த மனப்பரிபாகம் அடையும்போது குரு தானாக வருவார். குருவைத் தேடி அலைய வேண்டியதில்லை. வானொலிப் பெட்டியில் தகுந்த அலைவரிசையைத் திருப்பினால் தொடர்புடைய நிகழ்ச்சிகள் கேட்கும். அதுபோல பக்தன் தனது மனதை தகுந்த அலைவரிசையில் வைத்திருக்கும் போது குரு அந்த அலைவரிசையில் தானாக வந்தமருவார். ஸ்ரீராமகிருஷ்ணருக்கு தோத்தாபுரி தானாகத் தேடிவந்து உபதேசம் தந்தார்.

மூர்த்தி தவம் தீர்த்தம் முறையாகச் செய்தோர்க்கு வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்றார் தாயுமானவர். குருவின் பெருமையை திருமூலர்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருவுறு சிந்தித்தல் தானே

எனறு சொல்லுகிறார். மேற்கண்ட கட்டுரை அறிவியலும் ஆன்மீகமும் என்ற புத்தகத்தில் படித்ததை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: