Followers

Monday, July 18, 2016

சந்திர தசா சனி புத்தி


வணக்கம்!
          ஒருவருக்கு சந்திரன் தசாவில் சனி புத்தி நடைபெற்றால் அவர்களுக்கு எல்லா விதத்திலும் அடி மேல் அடி விழும். எந்த காரியமும் உடனே நடைபெற்றுவிடாது. 

ஒரு சிலருக்கு சனிக்கிரகம் மறைவு ஸ்தானத்தில் இருந்தால் அவர்களுக்கு அதிகப்பிரச்சினை ஏற்படும். சந்திரனில் இருந்து மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் பிரச்சினை ஏற்படும். என்ன பிரச்சினை என்றால் அனைத்திலும் குழப்பம் ஏற்பட்டுவிடும். 

சந்திர தசா சனி புத்தி காலம் 19 மாதம். இந்த 19 மாதமும் கொஞ்சம் வண்டி வாகனத்தில் செல்லும்பொழுது எச்சரிக்கையோடு சென்று வரவேண்டும். மனதடுமாற்றத்தில் நாமே சென்று எதிரே வரும் வாகனத்தில் மோதிவிடுவோம்.

சந்திர தசா சனி புத்தி காலத்தில் கொஞ்சம் கிறுக்கு பிடித்ததுபோல தான் இருப்பார்கள். பொதுவாகவே சந்திரன் சரியில்லை என்றால் சந்திர தசா முழுவதும் இப்படி தான் இருக்கும். சனி புத்தி என்று வரும்பொழுது அதிகமாக இருக்கும்.

நான் ஒரு சிலருக்கு அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். இந்த காலத்தில் எந்தவித முடிவும் எடுக்கமுடியாமல் இருக்கின்றனர். எந்த முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும் என்று குழப்பமாக இருக்கின்றனர்.

சனிக்கிரகம் நான்காவது வீட்டில் இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. நீரால் வரும் பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். ஒரு சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையும் ஏற்படுகிறது. என்னுடைய நண்பர் ஒருவருக்கு இந்த காலகட்டத்தில் நீர்க்கோர்வை ஏற்பட்டு அவதிப்பட்டார்.

ஆறாவது வீட்டில் சனி இருந்து புத்தி நடத்தினால் அவருக்கு வேலையாட்கள் வழியாக பிரச்சினை ஏற்படும். வேலையாட்கள் துரோகம் செய்வார்கள். நீங்கள் ஒருவரிடம் வேலை பார்த்து வந்தால் அவர் உங்களை அடிமை போல் நடத்திக்கொண்டு இருப்பார். உன்னை வேலையை விட்டு தூக்கிவிடுவேன் என்று மிரட்டி வேலை வாங்கிக்கொண்டு இருப்பார்.

நண்பர்களிடம் பழகும்பொழுது கொஞ்சம் எச்சரிக்கையோடு பழகுங்கள். ஏதாவது வம்பு வழக்கில் உங்களை மாட்டிவிட்டுவிடுவார்கள். நண்பர்களே உங்களுக்கு துரோகம் செய்து ஏமாற்றிவிடுவார்கள்.

கடக ராசிக்கு அதிபதி சந்திரன். கடகராசியில் இருந்து ஏழாவது வீடு மற்றும் எட்டாவது வீடு சனியின் வீடு. ஏழாவது வீட்டின் பயன் ஏற்றதாழ்வு நிறைந்த வாழ்க்கை. எட்டாவது வீடு என்பது விபத்து சந்திக்கும் அவமானம். மரணம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட பலனை தான் பொதுபலனாக ஜாதகம் கொடுக்கும். சோதிடத்தில் இப்படிப்பட்ட பலனை தான் கொடுக்கும் என்பதால் சந்திர தசா சனி புத்தி என்பது கொஞ்சம் கெடுதலான பலனாக பொதுவாக சொல்லப்படுகிறது.

மனிதனாக பிறந்துவிட்டோம் எதனையும் சமாளித்து தானே ஆகவேண்டும் எதுவாக இருந்தாலும் அதற்கு பரிகாரம் என்ற ஒன்று இருக்கின்றது. அதனை செய்து எதிர்நீச்சல் போடவேண்டியது தான். சரியான ஒரு பரிகாரத்தை செய்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: