வணக்கம் நண்பர்களே!
எனது ஊரில் எனக்கு என்ன வேலை என்றால் காலையில் எழுந்தவுடன் நூலகம் செல்வது அங்கு சென்று ஒரு புத்தகம் விடமால் படிப்பது இது தான் வேலை. எனது அப்பா என்னை பார்த்துவிட்டு இவனை இப்படியே விட்டுவிட்டால் சரிபட்டு வரமாட்டான் என்று ஒரு உறவினர் சென்னையில் தொழில் செய்துக்கொண்டு இருக்கிறார் அவரிடம் என்னை அனுப்பினர். அடையாரில் அலுவலகம் இருந்தது அவர் சென்னையில் பல தொழில்கள் செய்து வருகிறார்.
அடையாரில் மட்டும் நான்கு இடத்தில் சொந்தமாக இடம் வைத்திருந்தார். சென்னையில் கட்டிடதொழிலும் செய்து வந்தார். அவரிடம் நான் வேலைக்கு சேர்ந்தேன். அடையாரில் வசிக்க ஆரம்பித்தது அப்பொழுது இருந்து தான். நான் அங்கு வேலை பார்க்கும்பொழுது அந்த கம்பெனியில் மிககுறைந்த சம்பளம் வாங்கியது நான் ஒருவனாக இருக்கமுடியும். ஏன குறைவாக சம்பளம் கொடுத்தார் என்றால் ஊரில் இருந்து வந்திருக்கிறான் ஒன்றும் தெரியாது என்று அவரின் நரித்தனத்தை பயன்படுத்தினார். சரி நாமும் இந்த தொழிலில் புதியவன் தொழிலை கற்றுக்கொள்ளலாம் என்று எண்ணி இருந்துவிட்டேன்.
சரியாக ஒரு வருடகாலம் அதில் இருக்கும்பொழுது அனைத்தையும் கற்றுவிட்டேன். இவர் சம்பளத்தை மட்டும் ஏற்றவில்லை அப்பொழுது ஒரு நபர் வெளியில் எனக்கு பழகப்பட்டார். அந்த நபரிடம் நான் பழகியதை தெரிந்து இந்த தொழில் அதிபர் என்னை கம்பெனியில் இருந்து வெளியில் போகச்சொன்னார். நானும் வெளியில் வந்து சிறிய அளவில் ஒரு கம்பெனி தொடங்கலாம் என்று எண்ணி தெரிந்த நபரிடம் உதவி கேட்டேன் அவரும் உதவி செய்கிறேன் என்று சொன்னார்.
அப்பாடா சென்னை வந்து ஒரு வருடத்தில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கபோகிறோம் என்று எண்ணி மிகுந்த சந்தோஷம் அடைந்தேன். அப்பொழுது தான் விதி விளையாட ஆரம்பித்தது. நான் கம்பெனி ஆரம்பிக்கிறேன் என்பதை அறிந்துக்கொண்ட அந்த தொழில்அதிபர் என்னை விடக்கூடாது என்று பல தொந்தரவுகளை கொடுக்க ஆரம்பித்தார். பிரச்சினையை என்னால் எதிர்க்கொள்ளமுடியவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
அவரிடம் பல கோடி இருக்கிறது அவரை எதிர்ப்பது என்பது என்னால் முடியாதா காரியம். என்னிடம் ஒரு பைசா கிடையாது அனைத்தும் அடுத்தவர்களின் உதவி நோக்கி இருப்பவன் எப்படி மிகப்பெரிய சாம்ராஜத்தை எதிர்ப்பது. ஒரு பணக்காரனை எதிர்ப்பது என்பது நாமே சுவற்றில் போய் மோதிக்கொள்வதற்க்கு சமம். பணத்தை வைத்துக்கொண்டு நம்மை இந்த பூமியில் உயிரோடு வைக்கமாட்டார்கள்.
பல வழிகளிலும் தொந்தரவு கொடுத்தவர்கள் கடைசியில் என்ன செய்தார் என்றால் அடையார் காவல் துறையினர் மூலம் என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள். சரி இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற எண்ணினேன். சரி நமது திட்டத்தை கைவிட்டுவிட்டேன். என்னை மிரட்டினாலும் பரவாயில்லை என்னுடைய ஊரில் உள்ள எனது அம்மா அப்பாவையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
இனி அம்மனின் திருவிளையாடல்
மறுநாள் முதல் ஒரு பிரச்சினையும் வரவில்லை எந்த ஒரு ரூபத்திலும் பிரச்சினை வரவில்லை. நான் கம்பெனி ஆரம்பிக்க வேண்டாம் என்று விட்டு விட்டு கம்யூட்டர் தொழிலுக்கு வந்துவிட்டேன். அடுத்த மாதத்திலிருந்து என்னை மிரட்டிய தொழில் அதிபர் வீழ்ச்சி நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தார். அனைத்தும் போனது. அவர்கள் என்ன என்னவோ செய்து பார்த்தார். கேரளாவில் பார்க்காத மாந்தீரிகவாதி கிடையாது. எது செய்தும் நிற்க முடியவில்லை. கடைசியில் பல ஆன்மீகவாதிகளின் ஆலோசனைப்படி எனது சொந்த ஊரில் இருக்கும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிக்கு பல்வேறுப்பட்ட பூஜை காணிக்கை எல்லாம் செய்தார். ஒரு படியும் முன்னேற்றம் என்பது கிடையாது. அவரும் எனது உறவினர் மற்றும் எனது பக்கத்து ஊர்க்காரர் தான்.
சென்னையில் நூறு கோடி ரூபாய்க்கு சொத்துமதிப்பை கொண்டவர் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். வாடகை கொடுக்கமுடியவில்லை. ஒரு மனிதன் ஏழையாக இருந்து பணக்காரனாக போகலாம் ஆனால் பணக்காரன் ஏழையாக மாறினான் என்றால் அது போல் ஒரு கொடுமை இந்த உலகத்தில் இருக்கமுடியாது.அப்படி ஒரு கஷ்டத்தை அனுபவித்தார். அந்த தொழில் அதிபரின் மகனும் அயல்நாட்டில் வேலை பார்த்து வந்தார் அவரும் உருப்படவில்லை. அந்த வீட்டில் உள்ள அனைவரும் இன்று மிகவும் கேவலமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இன்றும் அவரை நான் பார்த்தது இல்லை. நான் ஒரு நாள் அம்மனை தியானத்தில் அமர்ந்து கேட்டேன். அதற்கு அம்மன் என்னுடைய பக்தனுக்கு ஒருவன் தீங்கு செய்தாலோ அவனை இழிப்படுத்தினாலோ ஏமாற்றப்பட்டாலோ அவன் யாராக இருந்தாலும் நான் விட்டுவைப்பதில்லை என்றது. நான் அவனை உன் கண்முன்னே கொண்டு வந்த நிற்கவைப்பேன் அப்பொழுது அவனின் நிலையை நீ பார் என்றது. எனது மனதிற்க்கு கஷ்டமாக தான் இருந்தது. அந்த குடும்பத்தினரின் கடைசி காலம் எப்படி இருக்கும் என்பது தெரிந்த ஒன்று தான்.
என்ன செய்வது ஒன்றும் முடியாத காரியம். ஒருவன் பணத்தை சம்பாதித்தால் அதனை வைத்துக்கொண்டு வாழவேண்டும் அதனை விட்டுவிட்டு அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது. நான் அப்பொழுது அந்தளவுக்கு பக்தி கிடையாது ஏதோ சாமி கும்பிடுவேன் ஆனால் எனது அம்மாவும் அப்பாவும் சிறந்த பக்திமான்கள். அம்மனுக்கு அனைத்தையும் கொடுத்தவர்கள். அம்மன் மேல் பாசம் என்பதை விட அப்படி ஒரு வெறி என்று தான் சொல்லவேண்டும். அவர்களின் பக்தி தான் நான் ஏதோ ஆன்மிகத்தில் வளர்ந்திருக்கிறேன் என்று சொல்லவேண்டும்.
ஒரு பணக்காரனின் பக்திவிட ஒரு ஏழையின் பக்தி அதிக வீரியம் கொண்டது. பணக்காரன் பக்தி சந்தேகத்துடன் இருக்கும் ஆனால் ஏழையின் பக்தி முழுமையானது அதில் ஒரு சந்தேகமும் இருக்காது. ஏழையின் கூப்பிட்ட குரலுக்கு ஒடி வருவாள் அம்மன். தன் கண்ணை இமை காப்பது போல் தன்னை வணங்கும் பக்தர்களை காப்பாள். அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
இந்த நிகழ்ச்சியை ஏன் சொல்லுகிறேன் என்றால் எனக்கு ஒருவன் தீங்கு செய்ததால் அவனுக்கு தீங்கு நடந்ததால் நான் மகிழ்ச்சி கொண்டேன் என்று சொல்லவி்ல்லை ஒரு அம்மனின் பக்தனுக்கு தீங்கு செய்தால் அந்த அம்மன் அதனை பார்த்துக்கொண்டு இருப்பதில்லை. அந்த பக்தனை எப்படி காப்பாற்றுகிறது என்பதை சொல்லுவதற்க்காக மட்டுமே இந்த பதிவு.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்காவில் ஆம்பலாபட்டு என்ற கிராமத்தில் பாலாயிக்குடிக்காடு என்ற தெருவில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் தான் எனது குலதெய்வம். அந்த தெய்வம் தான் உங்களுக்கும் இந்த தளம்வழியாக அருளை வழங்கிக்கொண்டிருக்கிறது. நான் எழுதுவதற்க்கும் உங்களை ஆன்மிகத்தில் உயர்த்துவதற்க்கும் இந்த அம்மன் உங்களுககு அருளை தருகிறது.
இந்த அம்மனின் கோவிலில் சிலை வைக்கவி்ல்லை புற்று தான் அம்மனாக இங்கு இருக்கிறது. ஒரு நாள் என்னிடம் இந்த நிலம் முழுவதும் பூமிக்கு அடியில் அனைத்தும் புற்றுவாகவே இருக்கிறேன் என்றது. நிறைய விசயங்கள் என்னிடம் சொல்லியுள்ளது அதனைப்பற்றி அவ்வப்பொழுது உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். இந்த அம்மனுக்கு பலவித மந்திரங்களை சொல்லி உரு ஏற்றுவதற்க்கென்றே பல பேர் பல நூறு ஆண்டுகளாக இங்கே செய்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்பேர்பட்ட ஆற்றலை கொண்டது அம்மன். அந்த சக்தியை அந்த மண்ணில் நீங்கள் கால் வைக்கும்பொழுதே உங்களுக்கு தோன்றும். நீங்கள் ஆன்மீகவாதியாக இருந்தால் இந்த பிளாக்கை படிக்கும்பொழுதே தெரியும் அதனை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால் இந்த அம்மனின் பூமியில் அடிவைக்கவேண்டும்.
இன்று ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிக்கு குலதெய்வ பூஜை. நீங்கள் ஒரு நிமிடம் இந்த அம்மனை இன்று நினையுங்கள் அப்பொழுது அம்மனின் அருளை பாருங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment