வணக்கம்!
நேற்று காலை உங்களுக்கு பதிவை தந்துவிட்டு பாபநாசம் அருகில் உள்ள திருகருகாவூர் சென்று கர்பகரஷாம்பிகையை தரிசனம் செய்துவிட்டு வந்தேன்.
தஞ்சாவூர் கும்பகோணம் மார்க்கத்தில் பாபநாசம் என்ற ஊரில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் திருகருகாவூர் என்ற ஊரில் இந்த பிரசித்துபெற்ற தலம் இருக்கின்றது. அம்மன் பெயர் கர்பகரஷாம்பிகை இறைவன் பெயர் முல்லைவனநாதர்.
அம்மன் பெயருக்கு ஏற்றார்போல் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரத்தை கொடுக்கும் அம்மனாக இருக்கிறார். குழந்தை இல்லாத தம்பதியர்கள் இங்கு வந்து பிராத்தனை செய்துவிட்டு சென்றால் குழந்தை உருவாகும்.
இறைவனுக்கு பெயர் முல்லைவனநாதர்.முல்லை வன கொடிகள் இறைவன் மேல் படர்ந்ததால் அந்த தடம் இன்றும் சிவா லிங்கத்தின் மேல் இருப்பதை காணலாம் என்று சொல்ல படுகிறது. இந்த லிங்கம் எறும்பு புற்றால் ஆனது என்றும் சொல்லுகின்றார்கள்.
நமது வாடிக்கையார்களுக்கு ஒரு சில வேண்டுதல்கள் இருப்பதாலும் என்னுடைய வேலைக்கும் இந்த கோவிலுக்கு சென்றேன். கருவுற்ற குழந்தை சுயபிரசவம் ஆவதற்க்கும் இந்த அம்மனை வேண்டுகிறார்கள். இதனை தவிர வேறு பிராத்தனை ஏதும் இங்கு செய்யபடுவதில்லை என்று நினைக்கிறேன். அனைவரும் இந்த பயனிற்க்காக மட்டுமே வருகிறார்கள்.
இந்த கோவிலில் வேலை செய்யும் ஆட்களுக்கு எந்த வித உதவியும் செய்யகூடாது என்று தட்டி வைத்துள்ளார்கள். நான் போனபொழுது மூன்று யாசகம் கேட்கும் சாமியார்களை பார்த்தேன். அவர்களுக்கு உதவி செய்துவிட்டு அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அவர்களின் விருப்பத்திற்க்கு நம்மால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
ஜாதககதம்பத்தில் இருந்து வந்த பணம் எல்லாம் இப்படிப்பட்டவர்களுக்கு கொடுப்பது வழக்கமாக இருக்கும். அவர்களின் தேவை என்ன என்பதை கேட்டுவிட்டு அவர்களின் விருப்பத்தையும் கேட்பேன். என்னிடம் அதற்கு உண்டான பணம் வரும்பொழுது கொடுத்து அனுப்பிவைப்பேன். இது அனைத்தும் ஜாதககதம்பத்தால் நல்லமுறையில் சென்றுக்கொண்டு இருக்கின்றது. பொதுவாக இவர்களின் தேவை யாத்திரை செல்வதற்க்குதான் அதிகம் இருக்கும். அதற்கு நம்மால் முடிந்த உதவியை செய்துவிடுவது உண்டு.
கோவிலை புதுமைப்படுத்தும் வேலை நடந்துக்கொண்டு இருக்கின்றது. விரைவில் கும்பாபிஷேகத்தை எதிர்பார்க்கலாம். கோவிலில் குழந்தை இல்லாதவர்களுக்கு நெய்யை மந்திரம் சொல்லி கொடுக்கிறார்கள். சுயபிரசவத்திற்க்கு விளக்கெண்ணெய் மந்திரித்து கொடுக்கிறார்கள்.
துலாபாரமாக வாழைத்தார் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பொதுவாக தமிழ்நாட்டில் கோவிலில் அதிகம் இதனை நான் பார்த்தது கிடையாது ஆனால் இந்த கோவிலில் இப்படி நடக்கிறது.
நல்ல சக்தி வாய்ந்த ஒரு தலத்திற்க்கு சென்றுவந்த திருப்தி எனக்கு கிடைத்தது. நீங்களும் இந்த பகுதிக்கு வரும்பொழுது சென்று வாருங்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் சென்று வாருங்கள்.
தஞ்சாவூர் கும்பகோணம் வழிதடத்தில் பாபநாசம் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து பஸ் வசதி உள்ளது. பாபநாசத்தில் இருந்து ஆறாவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதியும் உள்ளது. கும்பகோணத்தில் இருந்தும் பஸ் வசதி இருக்கின்றது.
மார்கழி மாதத்தில் நிறைய கோவில்களுக்கு சென்ற வர சொல்லிருந்தேன். அனைவரும் சென்று வாருங்கள்.
கீழே உள்ள மூலவர் படம் நெட்டில் இருந்து எடுத்து உங்களுக்கு தந்துள்ளேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு