வணக்கம்!
நேற்று ஈரோடு சென்று அங்கிருந்து பவானி சென்றடைந்தேன். நண்பர் வாருங்கள் கோவிலுக்கு சென்று வரலாம் என்று அழைத்து சென்றார். பவானி கூடுதுறை என்ற இடத்தில் சங்கமேசுவரர் கோவில் அமைந்துள்ளது. பவானி காவேரி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமிர்த நதி என்று மூன்று நதிகளும் கூடும் இடத்தில் கூடுதுறை அமைந்துள்ளது.
இறைவன் பெயர் சங்கமேசுவரர் இறைவி பெயர் வேதநாயகி என்கின்ற வேதாம்பிகை. கோவிலின் உள்ளே ஆதிகேசவப் பெருமாளும் சௌந்திரவல்லி தாயாரும் தனிக்கோவிலாக இருக்கிறார்கள். சைவம் மற்றும் வைணவம் இணைந்த கோவில். இந்த இடத்தை திருநணா என்றும் அழைக்கிறார்கள். தென் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கிறார்கள்.
முருகன் கோவிலுக்கு பின்புறமாக ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. நால்வராலும் பாடல் பெற்ற தலம்.
ஜாதகத்தில் அதிகம் தோஷம் இருக்கின்றவர்கள் இந்த தலத்திற்க்கு சென்று நதியில் நீராடிவிட்டு இறைவனை தரிசித்துவிட்டு வாருங்கள். அற்புதமான தலத்தை அனைவரும் கண்டிப்பாக தரிசனம் செய்யவேண்டும்.
நண்பர் தீபன் உதவியால் இதனை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன். ஆருத்ரா தரிசனம் அன்று நல்ல ஒரு தரிசனத்தை காணமுடிந்தது. நேற்று இரவே புறப்பட்டு இன்று காலை தஞ்சாவூர் வந்துவிட்டேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment