வணக்கம் நண்பர்களே!
சிவத்தை சுவாசிப்போம் என்று சொன்னேன் அல்லவா அதனை எப்படி சுவாசிப்பது என்பதை இனி வரும்பதிவுகளில் பார்க்கலாம்.
மண் தன்னை விழுங்கும் என்று எண்ணி மனிதன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். மரணத்தை பார்த்து ஒடி மறைக்கிறான் இவன் மறைந்தாலும் மரணம் இவனை விடபோவதில்லை. இன்று மருத்துவரையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டதற்க்கு காரணம் எப்படியும் மரணத்தை வெல்லவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதில் ஒரளவு வெற்றி பெற்றாலும் இவனால் முழுமையாக வெற்றி பெறமுடியவில்லை. இறப்பின் வயதை கூட்டி இருந்தாலும் முழுமையாக வெல்லமுடியவில்லை.
இறப்பை வெல்ல என்ன வழி என்று கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வந்தது தான் ஆன்மீகம். இறப்பு மட்டும் இல்லை என்றால் ஆன்மீகம் என்பதே இருக்காது என்று தான் சொல்லவேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து மதங்களும் தாங்கி நிற்பது மரணத்தில் தான். உலகில் உள்ள மதங்கள் அதிகம் பேசுவது மரணத்தை தவிர வேறு ஒன்றும் பெரிதாக இல்லை.
ஒவ்வொரு மனிதனும் பிறப்பில் இருந்து தான் வாழ்க்கை தொடங்குகிறான். இறப்பில் இருந்து எவன் வாழ்க்கையை தொடங்குகிறானோ அவன் ஆன்மீகவாதி.
இன்று நல்ல ஆன்மீகவாதிகளின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் அவனின் ஜாதகத்தில் லக்கினாதிபதி எட்டில் இருப்பார். எட்டாம் இடம் மரணத்தை காட்டக்கூடிய இடம். எட்டாம் இடத்தில் லக்கினாதிபதி அல்லது சனி கிரகம் நின்றால் அவன் மரணத்தை வெல்லகூடியவன். சனி ஆயுள்காரகன் அவன் எட்டில் இருக்கும்போது மரணத்தை பற்றி அதிக சிந்திக்க வைப்பார் அதனாலேயே அவன் மரணத்தை வெல்ல வேண்டும் என்று ஆன்மீகபாதையில் சென்றுவிடுவான்.
இந்த இடத்தில் இரண்டு பிரிவாக மக்கள் பிரிகிறார்கள். ஒன்று பிறப்பில் இருந்து தான் வாழ்க்கை தொடங்குகிறது என்று எண்ணி இல்லறவாழ்க்கையில் ஈடுபட்டு மரணத்தை வெல்லுவது. மற்றோன்று இறப்பில் இருந்து வாழ்க்கை தொடங்கிறது என்று எண்ணி இல்லறத்தை துறந்து சாமியாராகிவிடுவது.
இதில் யார் மரணத்தை வென்றார்கள்?
பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிகிறவனுக்கு மரணம் விருப்பமே இல்லாமல் அதுவாகவே வருகிறது. மனிதன் விரும்பாத ஒன்று நடக்கிறது என்றால் அது மரணம் தவிர வேறோன்றும் இல்லை. மனிதன் ஒவ்வொன்றும் தன் வாழ்க்கையில் இப்படி தான் இருக்கவேண்டும் என்று எண்ணி தன்னுடைய வாழ்க்கையை செதுக்கிறான் ஆனால் அவன் மரணத்தை ஒருபோதும் விரும்புவதில்லை.
சாமியார்கள் மரணம் தானே வாழ்க்கை. இறப்பில் தான் வாழ்க்கை தொடங்குகிறது. இதில் வாழ்க்கை என்பது ஏது? மரணம் தான் வாழ்க்கை என்று எண்ணி மரணத்தை வரவேற்க தயாராக உள்ளார்கள். (நான சொல்லும் சாமியார்கள் அகோரி நாகாஸ் போன்றவர்களை சொல்லுகிறேன். சொகுசு சாமியார்களை அல்ல).
ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிறக்கும் குழந்தைகள் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான். பிறப்பைப் பற்றி அதிக ஆராய்ச்சி செய்கிறான். இப்பொழுது மனிதர்கள் பிறக்கும் நேரத்தை எல்லாம் முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். குழந்தை எந்த நேரத்தில் பிறந்தால் நல்லபடியாக இருக்கும் என்று எண்ணி சோதிடர்களிடம் நல்ல நேரம் வாங்கிக்கொண்டு ஆப்ரேஷன் செய்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும் பிறப்பில் இருக்கும் எதிர்பார்ப்பில் மரணத்தில் ஒரு துளிக்கூட காட்டுவதில்லை. ஏன் காட்டுவதில்லை அவ்வளவு பயம் நிறைந்ததாகவே மரணத்தை பற்றி எண்ணுகிறான். ஆன்மீகவாழ்வின் அடித்தளமே மரணத்தைப்பற்றி ஆராய்வது தான்.
உலகில் நாத்திகரும் அதிகம்பேர் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லுவது என்ன என்றால் மனிதன் பிறப்பில் இருந்து இறப்பு வரை வாழ்வு. அதன் பிறகு அழிந்துவிடும் என்று நாத்திகர்களுடைய வாதம்.அழிந்த பிறகு ஒன்றும் இல்லை என அவர்கள் வாதாடுகிறார்கள்.
அறிவியல் துணையோடு அவர்களின் வாதத்தின் மேல் நாம் பார்த்தால் அவர்கள் சொல்லுவதும் தவறு என்று தான் எனக்கு தோன்றுகிறது. நமக்கும் படிப்புக்கும் கொஞ்சம் தூரம் அந்தளவுக்கு படிப்பறிவு எனக்கு கிடையாது இருந்தாலும் ஏதோ ஆண்டவன் மேல் உள்ள நம்பிக்கையில் எங்கேயோ எப்பொழுதோ படித்த ஒரு அறிவியல் கருத்தை உங்கள் முன் வைக்கிறேன்.
ஒன்று அழிந்தால் அது மற்றோன்றாக மாறும் இது அறிவியல். பிரபஞ்ச அறிவியல் சொல்லுவது பிரபஞ்சத்திற்க்கு முடிவு இல்லை. அனைத்தும் Recycle தான். ஒரு பொருளை அழித்தால் அந்த பொருள் வேறு ஒன்றாக மாறும். அதனை அழித்தால் அது வேறு ஒன்றாக மாறும். அதனை அழித்தால் அதவும் வேறு ஒன்றாக மாறும். கடைசியில் பார்த்தால் அந்த பொருள் எங்கு இருந்ததோ அதுவாகவே அதன் இறுதி முடிவில் வரும் அனைத்தும் ரீ சைக்கிள் தான். பின்பு எப்படி மனிதன் மரணத்திற்க்கு பிறகு எதுவும் இல்லை என்று சொல்லமுடியும்.
மனிதனை அழித்தாலும் அவன் சுழற்சியாகி சுழற்சியாகி அவன் மனிதனாக தான் வருவான். சுழற்சியை பற்றி நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன் ஏன் என்றால் நீங்கள் அனைவரும் நல்ல படித்தவர்கள். அந்த நம்பிக்கையில் இத்துடன் இதனை முடித்துக்கொள்கிறேன்.
பிரபஞ்சத்தில் உள்ளது வெட்டவெளி தான். இந்த வெட்டவெளியில் இல்லாததை ஒருபோதும் உருவாக்கிடமுடியாது. வெட்டவெளியில் எங்கேயே இருப்பதை தான் உருவாக்கிடமுடியுமே தவிர இதில் இல்லாததை ஒரு போதும் உருவாக்கிட முடியாது.
எந்த ஆன்மீகத்திலும் உச்ச நிலை எது என்றால் வெட்டவெளி தான். சூன்னிய நிலை என்று சொல்லுவார்கள். எதுவும் அற்ற நிலை என்பார்கள். தியானத்தில் இதனைப்பற்றி சொல்லுவார்கள் இதன் அனுபவம் கிடைப்பது கடினமான ஒன்று. மிகப்பெரிய தியான கூடத்தில் கூட இந்த நிலையை கற்றுக்கொடுப்பதற்க்கு இரண்டு வருடபயிற்சி கொடுப்பார்கள். அந்த நிலை கூட ஒரு சில நொடியில் முடித்துக்கொள்வார்கள் அதிகமாக கற்றுதருவதில்லை. இன்றைக்கு கற்று தரும் யோகா தியானம் எல்லாம் பேருக்கு தான் ஒழிய அதில் ஒன்றும் பெரியதாக சாதித்தது கிடையாது.
வெட்டவெளி அல்லது ஒன்றும் இல்லாத நிலை அது தான் சிவனின் நிலை என்பார்கள். இந்த உலகத்தில் அதிகமாக உள்ளது வெட்டவெளி தான். ஆகாய ரூபமாக சிவனை தரிசிப்பது என்பது மிகப்பெரிய ஆனந்த நிலை. இந்த வெட்டவெளிக்குள் தான் நானும் இருக்கிறேன் நீங்களும் இருக்கிறீர்கள். இந்த கிரகங்கள் நட்சத்திரங்கள் என்று பல கோடி விசயங்கள் இருக்கின்றன.
நீங்களும் உங்கள் நண்பரும் பேசிக்கொண்டு இருந்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம் இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளி தான் வெட்டவெளி. நீங்கள் இருப்பதும் வெட்டவெளி வாழ்வதும் வெட்டவெளி நாளை நீங்கள் தொலைந்து போக போவதும் வெட்டவெளி. இந்த வெட்டவெளி தான் சிவன். நீங்கள் வாழ்வதே அவனில் தான். பிறகு எங்கே போய் அவனை தேடுவது. நீ்ங்களே அவனாக இருக்கிறீர்கள். அவனே நீங்களா இருக்கிறான்.
பிரபஞ்சத்தில் இல்லாத ஒன்றை உருவாக்கிடமுடியாது என்று சொன்னேன் அல்லவா. அப்பொழுது நீங்கள் எங்கேயோ இருந்திருக்கிறீர்கள் எங்கேயோ போகபோகிறீர்கள். நீங்கள் பிறப்பதற்க்கு முன் எங்கேயோ ஒழிந்துக்கொண்டிருந்தீர்கள் வந்து பிறந்துவிட்டீர்கள். இறப்புக்கு பிறகு எங்கேயோ போகபோகிறீர்கள். எங்கு இருந்து வந்தீர்கள்? எங்கு போகபோகிறீர்கள்?
சிவத்தை சுவாசிப்போம்..
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment