Followers

Thursday, February 19, 2015

சிவபூஜை பகுதி 1


வணக்கம்!
         சிவபூஜையைப்பற்றி சொன்னதில் இருந்து அதனைப்பற்றி நிறைய கேள்விகள் வந்தன. அதனை ஒரு சிலர் செய்யவும் தொடங்கிவிட்டனர். இந்த பதிவை சிவராத்திரி அன்றே அளிக்கவேண்டும் என்று இருந்தேன். அன்று எனக்கு பல வேலைகள் இருந்த காரணத்தால் உங்களுக்கு அளிக்கமுடியவில்லை. இன்று பார்க்கலாம்.

சிவபூஜை செய்வதற்க்கு நடராஜர் சிலை ஒன்றை கடையில் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். கடையில் வாங்கும்பொழுது அந்த சிலைக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்று கேட்டுவாங்குங்கள். ஒரு சில சிலைகள் அபிஷேகம் செய்யமுடியாது. அபிஷேகம் செய்யக்கூடிய சிலையை அவர்கள் தருவார்கள்.

பெரிய தட்டு ஒன்றை வாங்கிக்கொண்டு அதில் நடராஜர் சிலை வைத்துக்கொண்டு ஸ்ரீ ருத்ரம் ஆடியோவை ஒலிக்கவிட்டு பூஜையை தொடங்குங்கள். ஒரு அகல் விளக்குயில் தீபம் ஏற்றி வைத்துக்கொண்டு அதற்கு சிறிய தம்பளம் ஒன்றை வைத்து அகல் விளக்கை அதில் வைத்துக்கொள்ளுங்கள்.  

நடராஜருக்கு முதலில் தண்ணீரை வைத்து அபிஷேகத்தை ஆரம்பியுங்கள். பிறகு உங்களுக்கு விருப்பமான பொருட்களை வைத்து அபிஷேகம் செய்யுங்கள். ஒவ்வொரு அபிஷேகம் முடிந்தவுடன் நடராஜருக்கு ஒரு திலகம் இட்டு தீபாராதனையை காண்பியுங்கள். முழுமையான அபிஷேகம் முடிந்தவுடன் நடராஜரை அபிஷேக தட்டியில் இருந்து எடுத்து வெளியில் வைத்துக்கொண்டு ஊதுவத்தி சாம்பிராணி போட்டு முடிந்தால் நைவேத்தியம் வைக்கலாம் அல்லது அவல் பொரி வைத்து ஐந்து தீபம் ஏற்றி தீபாராதனை காண்பியுங்கள்.

சிவன் அருள் பெற அபிஷேகம் பொருட்கள் அதன் பயன்கள்

முதலில் நல்லெண்ணையை சிலை முழுவதும் ஊற்றி நன்றாக உடல் மீது படுமாறு கைகளால் தேய்த்துவிடுங்கள். எண்ணெய் நாம் அபிஷேகம் செய்யும்பொழுது நமது கர்மவினைகள் அனைத்தையும் சிவன் எடுத்துவிடுவார்.

மஞ்சள் பொடியை எடுத்து சிறிய பாத்திரம் வைத்துக்கொண்டு அதில் தண்ணீரில் மஞ்சள் பொடியை போட்டு நன்றாக கலக்கி அபிஷேகம் செய்யவேண்டும். மஞ்சள் பொடியை சிவனுக்கு அபிஷேகம் செய்யும்பொழுது உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்க்கும் மங்களம் பொங்கும்.

நாட்டு மருந்து கடையில் திரவியப்பொடி என்று கேட்டுவாங்குங்கள். திரவியப்பொடியை பாத்திரத்தில் போட்டு தண்ணீரை விட்டு நன்றாக கலக்கி அதனை அபிஷேகம் செய்யவேண்டும். திரவியப்பொடியை சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் பொருள் வளம் பெறமுடியும்.

நாட்டுமருந்துகடையில் நீங்கள் எல்லாப்பொருட்களும் வாங்குங்கள். வாசனைப்பொடி என்று கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். அதனை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி அதனை அபிஷேகம் செய்யுங்கள். வாசனைப்பொடியை நாம் சிவனுக்கு அபிஷேகம் செய்யும்பொழுது நமது எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

மாவுப்பொடி இது அரிசிமாவுப்பொடி தான். வீட்டில் அரிசியை ஊறவைத்து மிக்ஸியில் கூட அடித்துக்கொள்ளலாம். இதனை அப்படியே எடுத்து அவரின் உடல் மீது படுமாறு வைக்கவேண்டும். இதனை தண்ணீரில் கலந்துவிடாதீர்கள். உடல் மீது வைப்பது தான் அபிஷேகம். மாவுப்பொடியை நாம் சிவனுக்கு பயன்படுத்தும்பொழுது மாந்தர் உயர்வு பெறலாம்.

நமக்கு எல்லாம் மிகப்பெரிய பலகீனம் நமது நினைவாற்றல் திறன். முக்கால்வாசி பேருக்கு நினைவாற்றல் திறன் இருப்பதில்லை. நெல்லிப்பொடியை கடையில் வாங்கி அதனை சிவனின் அபிஷேகத்திற்க்கு பயன்படுத்தும்பொழுது நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். இந்த பொடியை சிலைக்கு தேய்க்கலாம் அல்லது தண்ணீரில் கலந்துகூட பயன்படுத்தமுடியும்.

பால் இது பசும்பாலாக இருந்தால் நல்லது. இப்பொழுது பசும்பால் கிராமங்களில் கூட கிடைப்பது அரிதாகிவருகிறது. இயற்கையான பாலாக இருந்தால் நல்லது கிடைக்கவில்லை என்றால் கடையில் உள்ள பாலை வாங்கிக்கொள்ளுங்கள். பசும்பாலை அபிஷேகத்திற்க்கு பயன்படுத்துவதால் ஆயுள் விருத்தியடையும்.

இந்த காலத்தில் குழந்தைகள் ஒருவருக்கு பிறப்பது என்பதே மிகப்பெரிய விசயமாக இருக்கிறது. குழந்தை இல்லாதவர்கள் அபிஷேகத்திற்க்கு தயிரை பயன்படுத்தும்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் இருப்பவர்கள் அவர்களின் நல்வாழ்விற்க்கு இந்த அபிஷேகத்தை செய்யலாம்.

செல்வவளத்திற்க்கு நமது ஜாதககதம்பம் நிறைய சொல்லியுள்ளது அதனோடு இதனையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பஞ்சாமிர்தம் வைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்யும்பொழுது உங்களுக்கு நல்ல செல்வவளத்தை தரும்.

இந்த காலத்தில் பதவி என்று அலைபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள். நீங்கள் இருக்கின்ற வேலையில் நல்ல பதவியை நீங்கள் அடையவேண்டும் என்றால் இளநீர் வைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்யுங்கள்.

அடுத்த பதிவில் மீதம் உள்ளவற்றை பார்க்கலாம்...

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: