சிவபெருமான்:- ஒளியில் அருட்பெருஞ்ஜோதியாகவும், ஒலியில் ஓம் கார ஒலியாகவும் விளங்கும் பரம்பொருளின் உருவமே சிவபெருமானாவார்.
நிலை:- எண்ணங்களற்ற மோன நிலையாகிய பரமானந்த நிலையில் என்றென்றும் வீற்றிருக்கிறார்.
சிவலிங்கம்:- எல்லா உயிர்களிலும் சிவலிங்க சொரூபத்தில் ஆன்மாவாக திகழ்கிறார்.
முக்திக்கு வழி:- அன்பும், ஆத்ம ஞானமும். இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று பிண்ணி பிணைந்தவை.
அன்பு:- கள்ளம் கபடமற்ற தூய உள்ளமும், அன்பும் கொண்ட குழந்தை வடிவில் இருக்கிறார்.
ஞானம்:- கண்கள் மூடியிருந்தாலும், மூன்றாம் கண்ணாகிய நெற்றிக்கண், ஆன்மா எப்பொழுதும் விழித்திருக்கும். அதுவே உயிர் நாடி, பரம்பொருளின் ஒரு துளி. அகம் பிரமாஸ்மி.
முக்கண்ணன்:- மனிதன் நெற்றிப்பொட்டில் ஆன்மாவாக வீற்றிருக்கும் பரம்பொருளை தரிசிப்பதே மனிதப்பிறவியின் நோக்கம். ஆன்மாவை அறிய வேண்டும் என்று உணர்த்துவதே இவரது நெற்றிக்கண்.
ஆத்மஞானமாகிய நெற்றிக்கண்:- ஆன்மா அறியப்படும்போது நெற்றிக்கண் திறக்கப்படும். இந்த நெற்றிக்கண்ணில் இருந்து வந்த ஞானக்கனலே நக்கீரரின் ஆணவத்தை அழித்தது, காமரூபமான மன்மதனை பொசுக்கியது, மாயையின் காரணமாக தட்சனின் யாகத்துக்கு சென்று அவமானப்பட்ட உமாதேவியை சுட்டெரித்தது. இந்த ஞானக்கனலிலிருந்து பிறந்த முருகனே தகப்பனுக்கு பிரணவ தத்துவத்தை எடுத்துரைத்து தகப்பன்சாமி ஆனான்.
பிறைநிலா:- தேய்பிறை, வளர்பிறை கொண்ட நிலா போல, மனித வாழ்வும் ஏற்றமும், இறக்கமும் கொண்டது. அதை உணர்த்தவே நிலாவை சூடியுள்ளார்.
பற்றற்ற நிலை:- ஈரேழு உலகமும் இவரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தாலும் இவர் வசிப்பது மலையிலும், காட்டிலும். பொன் மலைபோல கொட்டி கிடந்தாலும் அணியும் ஆபரணமோ பாம்பு. இவரது படைப்பில் உயரக ஆடைகள் இருந்தாலும் உடுத்துவதும், உறங்குவதும் புலித்தோல்.
அவனருளன்றி அவனை பற்றி எழுத இயலாது. எளியேன் உணர்ந்தது. தவறிருந்தால் சுட்டி காட்டவும்.
சர்வம் சிவார்ப்பணம்.
அன்புடன்,
மகேஸ்வரன்.
நன்றி மகேஸ்வரன்
அருமையான பொருளோடு விளக்கத்தை தந்திருக்கறீர்கள் உங்கள் குடும்பம் சிறக்க சனிபிரதோஷத்தின் நாயகன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் காப்பான்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment