வணக்கம் நண்பர்களே !
நீண்ட நாட்களாக ஆன்மீக அனுபவங்கள் எழுதவில்லை. இடையில் பூர்வபுண்ணிய பகுதி தொடர்ந்து எழுதியதால் இதனை விட்டுவிட்டேன். நண்பர்கள் விடுவார்களா என்ன. போன் செய்து எழுதுங்கள் என்று கேட்டு்க்கொண்டார்கள். ஆன்மீக தாகம் அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த தொடர் ஏதோ செய்கிறது என்பது மட்டும் உண்மை. நான் இதனை நேரிடையாகவே பல பேர்களிடம் பார்த்து தெரிந்துக்கொண்டேன்.
ஒரு சோதிடன் என்பவன் அனைத்திலும் கைதேர்ந்தவனாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவனை தேடி வருபவர்களுக்கு நன்மை செய்யமுடியும் என்பதை உணர்ந்ததால் அனைத்தையும் எழுதுகிறேன். எது தேவையோ அதனை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
என்னிடம் பேசும் நண்பர்கள் எனக்கு அறிவுரை பலமாதிரி வழங்குகிறார்கள். நீங்கள் ஏதும் தவறு செய்யாதீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. உங்களின் கருத்து புதுமையாக இருக்கிறது என்று ஏகாப்பட்ட செய்திகளை அவ்வப்போது தந்துக்கொண்டு இருக்கிறார்கள். எதனால் இப்படி சொல்லுகிறார்கள் என்று எனக்கு புரிகிறது.
இந்த உலகில் மனிதனாக பிறந்துவிட்டால் அவன் மனிதனாக தான் வாழமுடியும். அவன் தெய்வமாக வாழமுடியாது. எப்பொழுது அவன் தெய்வமாக மாறுகிறானோ அன்று அவன் இந்த பூமியில் இருப்பதில்லை என்பதை முதலில் புரி்ந்துக்கொள்ளுங்கள். நீங்கள் மகான் என்று நினைப்பவர்களும் இப்படி தான் அவர்கள் அந்த மிகப்பெரிய சக்தியை உணர்ந்தவர்கள் தான் ஆனால் அந்த சக்தியிடம் சென்றால் தான் அவர்கள் தெய்வமாக முடியும் என்பதை உணருங்கள்.
நீங்கள் நினைக்கும் மகான்கள் எல்லாம் ஏன் அந்த சக்தியை உணர்ந்துக்கொண்டு உடனே அந்த சக்தியிடம் செல்லவில்லை என்று கேட்கலாம். அவர்கள் உணர்ந்துக்கொண்ட உடனே அவர்கள் அந்த சக்தியிடம் செல்லமுடியாது இதுவரை அவர்கள் செய்த கர்மாவை கழிப்பதற்க்காக அவர்கள் இங்கு இருக்கிறார்கள். நாம் என்ன செய்வோம் அவர்கள் தான் கடவுள் என்று நினைத்து வணங்க ஆரம்பித்துவிடுவது அவர்களே அவர்கள் கர்மாவின் வினையை தீர்க்கும் முயற்சியில் தான் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் வணங்குவது தப்பில்லை ஆனால் அவர்கள் தான் எல்லாம் என்று நினைப்பது தவறு.
அப்படிபட்டவர்களே கர்மாவை தீர்ப்பதற்க்கு இருக்கும்போது நாம் எப்படி நம்முடைய கர்மாவை தீர்ப்பது ?
இன்றைய ஆன்மீகத்தை பார்த்தீர்கள் என்றால் வெளிஉலகத்தில் காட்டும் ஆன்மீகமாக தான் இருக்கிறது. நல்ல தாடி வைத்துக்கொள்வது காவி கட்டிக்கொள்வது நெற்றியில் விபூதி வைத்துக்கொள்வது அடிக்கடி அந்த கோவிலுக்கு செல்லுகிறேன் அந்த விரதத்தை செய்கிறேன். இப்படி ஏகாப்பட்ட விளம்பரம் இப்படி வெளியில் சொல்லிக்கொள்ளும் ஆன்மீகமாக தான் இருக்கிறது. உள்ளுக்குள் நடக்கும் மாற்றத்தை காணமுடியவில்லை.
இன்னும் சிலபேர் நான் அசைவம் சாப்பிடுவதில்லை. உடலறவு வைத்துக்கொள்வதில்லை மது அருந்துவதில்லை இன்னும் பலவிதத்தில் சொல்லுவார்கள். மனிதன் போகப்பொருளை துறந்துவிட்டேன் என்று சொல்லலாம் ஆனால் போகபொருட்களிலிருந்து புலன்களை மீ்ட்கிறானே தவிர அவனுக்கு அந்த போகப் பொருட்களில் உள்ள பற்று அற்றுப் போவதில்லை அவனுடன் இருக்க தான் செய்கிறது. புலன் துடிப்புகள் போகப்பொருட்கள் மீது ஒடிக்கொண்டு தான் இருக்கின்றன, ஆமை தனது உடல் உறுப்புகளை ஒடுக்கிக்கொள்வது போல அனைத்தின் மீதும் புலன்களை மீட்கிறான் ஆனால் உள்புலன்கள் அதன் மீது நாட்டம் இருக்கும்.
போகபொருளை ஏன் துறக்கிறான் என்றால் ஒன்று பயமாக இருக்கும் அல்லது அதனால் மரணம் வந்துவிடுமே என்று நினைப்பான். மனிதன் ஏதோ ஒன்றையோ பல போகங்களையோ துறக்கிறான் எப்படி எப்போது எந்த போகத்தைத் துறக்கிறானோ அப்போது அந்தப்பொருள் விலகுகிறது, அதுபோல எல்லாப் போகங்களையும் துறந்தால் எல்லாப்பொருட்களும் விலகுகினறன இப்படி அவை விலகுவதற்க்குக் காரணம் பிடிவாதமோ பயமோ வேறு காரணமோ இருக்கலாம். அதனால் உண்மையில் அதில் அவனுக்குள்ள பற்று விலகிவிட்டது என்று சொல்லமுடியாது.
நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அவருடன் சண்டை போட்டு அவரை விலகலாம் ஆனால் அந்த நினைவுகள் அப்படியே உங்களிடம் இருக்கும். (இங்கே பொருள் என்று சொல்லுவது அவரின் உடலை தவிர்ப்பீர்கள்) உள்ளுக்குள் அவரின் நினைவு இருக்கதான் செய்யும். இதுபோல தான் அனைத்து போகங்களும் நீங்கள் தவிர்க்கலாம் ஆனால் உள்ளுக்குள் அதன் மீது ஈர்ப்பு இருக்கதான் செய்யும்.
ஏன் இதனை விடவேண்டும்?
உலகியலில் மனிதன் இன்பத்தை நுகர விரும்புகிறான் அல்லது சில சித்துக்களை பெறுவதற்க்கு வேறு உலகியல் இன்பத்தை அனுபவிப்பதற்க்காகவே தியானத்தில் அமர்ந்துவிடலாம் சமாதியிலும் இருந்துவிடலாம். அப்பொழுது போகத்தை துறந்திருக்கலாம் மனதால் கூட அவற்றை நினையாமல் இருக்கலாம். ஆனால் போகங்களில் உள்ள பற்று அவனிடம் தங்கி இருக்கதான் செய்யும். இவ்விதம் போகங்களை துறப்பதால் புலன்நுகர் பொருட்கள் விலகுமே ஒழிய மனநிலையில் உள்ள பற்று போகாது.
இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் நம்மிடம் இருக்கும் மனிதர்கள் அந்த கடவுளை அடைய முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கடவுள் கிடையாது. அவர்கள் தான் கடவுள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களின் அறியாமை தான்.
ஜாதககதம்பத்தை எழுதுபவனும் ஒரு மனிதன் தான். அவனை நீங்கள் மனிதனாகவே பாருங்கள் அது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது. என் மூலம் வரும் கருத்துகளை உங்களின் மனதில் எடுத்துக்கொண்டு உங்களில் மாற்றத்தை காணமுயற்சி செய்யுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
REALLY GOOD :)
//கிருஷ்ணா said...
REALLY GOOD :) *//
வருக வணக்கம் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment