Followers

Friday, December 13, 2013

ஆன்மீக அனுபவங்கள் 139


வணக்கம் நண்பர்களே!
                    நண்பர்கள் என்னை சந்திக்கும்பொழுதும் மற்றும் போனில் தொடர்புக்கொள்ளும் போதும் என்னிடம் கேட்கும் கேள்வி நீங்கள் சொல்லும் கருத்து எனக்கு பிடித்திருக்கிறது. எங்களுக்கு நீங்கள் ஆன்மீகவகுப்பு எடுங்கள் என்று கேட்பார்கள்.

நான் அவர்களிடம் இந்தியாவில் இருக்கின்ற சாமியார்கள் போதும் இதில் நான் வேறு உங்களுக்கு வகுப்பு எடுக்கவேண்டுமா? இந்தியாவில் உள்ள ரோட்டில் போகும்பொழுது தவறி விழுந்தால் சாமியார்களின் மடங்கள் மீது தான் விழவேண்டும்.

ஒவ்வொரு மடத்திலும் மற்றும் ஒவ்வொரு சாமியார்களிடமும் முதல் இடம் வகிப்பது தியானம். உங்களுக்கு தியானம் கற்று தருகிறேன். யோகம் கற்றுதருகிறேன் என்று தான் இருக்கின்றது.

நான் பல நேரங்களில் சிந்தனை செய்து பார்த்தது உண்டு. எப்படி தியானத்தை அடுத்தவர்களுக்கு கற்று தரமுடியும்.  பல பேர்கள் சொல்லுவார்கள் தியானவகுப்பு என்பார்கள். வகுப்பு என்பது சேகரிக்கப்பட்ட மனம். அந்த குப்பையை எடுத்து அடுத்தவர்களின் மனதில் கொட்டுவது தான் வகுப்பு. சேகரிக்க்பட்ட தகவலை சொல்லிதருவது எப்படி தியானம் ஆகும் என்று நினைத்திருக்கிறேன்.

உங்களுக்கு வாய்பாடு தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு வாய்பாட்டையும் ஆசிரியர் உங்களுக்கு சொல்லி தருகிறார் என்றால் அவரின் மனதில் இருந்து மனப்பாடமாக உள்ள ஒரு விசயத்தை உங்களின் மீது கொட்டுகிறார் என்று அர்த்தம். அதனை நீங்கள் பின்பற்றுவீர்கள். ஒன்று என்ன நடக்கும் அதனை கற்பீர்கள் அல்லது அதற்கு எதிராக செல்வீர்கள்.

இது சரியில்லை என்று வைத்துக்கொள்வோம் வேறு பாடத்தை தேர்வு செய்வீர்கள் என்றால் அங்கு இது போல் தான் நடக்கும். இது ஒரு சுழல் போன்ற செயல். அதனை சுற்றி சுற்றியே நகர்ந்து கொண்டிருக்கும். மனது.

மனது அதனை சுற்றி சுற்றி செல்லும்பொழுது என்ன நடக்கும். ஒரு கட்டத்தில் அலுப்பு தட்டிவிடும் அல்லது சோர்ந்துவிடும்.அப்பொழுது தான் மனது பாதிப்புக்குள் ஆகின்றது.

தியானம் என்றால் மனதில் எந்தவித எண்ணங்களும் இல்லாமல் இருக்கவேண்டும். இப்பொழுது தியானவகுப்பு என்று சொன்னால் ஒருத்தரின் எண்ணத்தை உங்களின் மீது கொட்டினால் உங்களின் மனம் அவர் சொன்னது போல் தான் செய்யும். அடுத்தவர்களின் கட்டளைக்கு கீழ்படிந்து உங்களின் மனம் செயல்படுகிறது என்ற அர்த்தம். இது ஒரு புதிய சுழல் தானே தவிர அது தியானம் இல்லை. ஏற்கனவே உங்களின் மனம் போன போக்கில் சென்றுக்கொண்டிருந்தீர்கள் இப்பொழுது ஒருவர் சொல்லும் வார்த்தையில் உங்களின் மனம் சென்றுக்கொண்டிருக்கிறது. அனைத்தும் சுழல் தானே தவிர தியானம் கிடையாது.

என்ன ஒன்றும் புரியவில்லையா?

உங்களுக்கு இன்னும் எளிமையாக ஒன்றைச்சொல்லுகிறேன் பாருங்கள்.

மனதிற்க்கு தியானம் என்று சொல்லுவார்கள். மனதில் தான் புத்தி இருக்கின்றது  இதுவரை ஜாதககதம்பத்தில் எழுதியவை அனைத்தும் படித்திருந்தால் அது புத்தி.சேகரிக்கப்பட்ட மனம் என்று அர்த்தம். ஜாதககதம்பத்தில் சோதிடம், பூர்வபுண்ணியம் மற்றும் ஆன்மீக அனுபவங்கள் வரும் அதில் என்ன என்ன எழுதிஇருக்கிறேன் என்று உங்களுக்கு தெரிந்தால் அது புத்தி. இதுவரை சேகரிக்கப்பட்ட தொகுப்பு அது.

இனிமேல் வருகின்ற பதிவு எல்லாவற்றையும் படித்து வைக்கும் ஒரு இடம் தான் மனம். மனம் அனைத்தையும் சேகரிக்கும்.

இதுவரை எழுதியவற்றை படித்து வைத்திருக்கிறீர்கள். அது புத்தி என்றேன். இனிமேல் எழுதபோகும் விசயத்தையும் உங்களின் மனது உள்வாங்கினால் அதுவும் புத்தி தான்.  புத்தி எப்படி தியானமாகும்?

தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: